ஒரு வண்ணத்துபூச்சி
நான்
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே
ஒரு வண்ணத்துப்பூச்சி நுழைந்தது
அது மஞ்சள் நிறத்தில் இருந்தது
அப்போது என் வயது பத்து
பொறுமையற்ற வருடங்கள் கழித்து
நான் வெளியேறியபோது
என் இடது தோளின் மேலாகப் பறந்து
வெளியேறியது . அப்போதும்
அது மஞ்சளாகவே இருந்தது
நரைக்கூடிக் கிழப்பருவம் எய்தி
கடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்
ஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்
முகத்தின் குறுக்காக விரைந்து சென்றது
அப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்
இருந்தது.
தன் இரண்டு ஜன்னல்களைத்
திறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்
வண்ணத்துப்பூச்சி
என்னைப்பற்றி
என்ன கதையடிக்கும்.
**
மழை
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
**
அன்பின் சிப்பி
என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஒட்டமும் நடையுமாய்.
**
குருட்டு ஈ
ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**
பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**
அன்பின் எழுத்துகள்
எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**
நன்றி: www.sramakrishnan.com
No comments:
Post a Comment